மிழ்நாட்டின் TOP 5 தொழி லதிபர்களில் நான்காவது இடத்தில் போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷ் இருக்கிறார் என தகவல்களுக்கான தளமான 'PLATFORM' குறிப்பிட்டுள்ளது. நூற்றாண்டு கண்ட போத்தீஸ் குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனமாக  ‘மினிஸ்டர் ஒயிட்’ விளங்குகிறது. அதன் நூற்பாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளது. 

போத்தீஸ் நிறுவனத்துக்கு தமிழ்நாட்டில் சென்னை, திருநெல்வேலி, மதுரை,  கோவை, திருச்சி, நாகர்கோவில், சேலம், ஸ்ரீவில்லிபுத்தூரிலும், கேரளாவில் திருவனந்தபுரத்திலும், கர்நாடகாவில் பெங்களூருவிலும், பாண்டிச் சேரியிலும் என இந்தியாவின் முக்கிய நகரங்களில் 19 கிளைகள் உள்ளன. இந்நிறுவனத்தினர், போத்தீஸ் ஸ்வர்ண மஹால் என்ற பெய ரில் தங்க நகை வியா பாரத்திலும் ஈடுபட் டுள்ளனர். 

‘போத்தீஸ் புராணம் எதற்கு?’ என்ற நமது கேள்விக்கு... 

Advertisment

சிவகாசியைச் சேர்ந்த அன்னராஜ் என்பவர்  “ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வீவிங் யூனிட்டில் "நான் விசைத்தறி இயக்கும் தொழிலாளியாக வேலை பார்த்தேன்.  கடந்த 2023 தீபாவளிக்குப் பிறகு எந்த முன்னறிவிப்பும் இன்றி 250க்கும் மேற்பட்ட ஊழியர்களை அரசு அனுமதியின்றி திடீரென்று வேலையிலிருந்து நிறுத்திவிட்டார்கள். தொழி லாளர் விரோதப் போக்கினை முழுமையாகக்  கணக்கிட்டு, தொழில் தகராறுகள் சட்டம் 1947ன்படி  ரூ.40 கோடி நஷ்ட ஈடு கேட்டு, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடன் இணைந்து கடந்த ஒன்றரை வருடங்களாகப் போராடி வருகிறேன். மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மினிஸ்டர் ஒயிட் நிர்வாகத்திடமிருந்து பெற்றுத்தர,  விருதுநகர் தொழிலாளர் துணை ஆணையாளர் (சமரசம்) அவர்களிடம் அளித்த மனுவில் நான் உள்ளிட்ட 83 பேர் கையெழுத்திட்டோம். நாங்கள் நடத்திவரும் சட்டப் போராட்டத்துக்கான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் தருகிறேன்''’என்று பரப்பினார். 

mrwhite1

தன்னுடன் வேலைபார்த்த இருளப்பன், முத்துகுமார், முருகன் ஆகியோருடன் வந்திருந்த அன்னராஜ், "ஒருவேளை நிறுவனம் பெரும் நஷ்டத்தில், இயங்கவே முடியாத நிலையில் இருந்தால்கூட, வேறு வழியில்லாமல் தொழிலாளர் சுரண்டல் நடந்திருக்கிறது என்பதை கனத்த மனதுடன் ஏற்றுக்கொள்ள முடியும். போத்தீஸ் குழுமம் அபரிமிதமான லாபத்தில் இயங்கும்போது தொழிலாளர்களுக்கு ஏன் துரோகம் இழைக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய கேள்வி'' என்றார் ஆதங்கத்துடன். 

Advertisment

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையோ, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையோ, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையோ,  எந்தத் துறைக்கு மனு அனுப்பினாலும், விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி லெட்டர் பேடில், தன்னைச் செயலாளர் என்று குறிப்பிடத் தவறுவதில்லை அன்னராஜ். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, ‘அன்னராஜ் என்பவருக்கு கட்சியில் அதிகாரப்பூர்வமான எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை..’ என்று மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்தின் மேலாளர் அருண் தங்கசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

"அப்படியென்றால் நீங்க...?''’ எனச் சந்தேகிக் கும் விதத்தில் அன்னராஜுவிடமே நாம் கேட்க,  “"இப்ப காங்கிரஸ் கட்சில முக்கிய பொறுப்புல இருக்கவங்க யாரும் அடிப்படை உறுப்பினரா இருந்து பதவிக்கு வந்தவங்க கிடையாது. நான் 1984-ல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினரானேன்.  கட்சி வளர்ச்சிக்குப் பாடுபட்டு படிப்படியாக மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு வந்தேன். மினிஸ்டர் ஒயிட் பெரிய நிறுவனம் அல்லவா? போத்தீஸ் நிர்வாக இயக்குநர் ரமேஷ் அனைத்து மட்டத்திலும் செல்வாக்கு உள்ளவர் அல்லவா? அதனால்தான் குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்துகொள்கிறது காங்கிரஸ் மேலிடம்''’என்று உணர்ச்சிவசப்பட்டார். 

அன்னராஜ் வைத்திருக்கும் ஆவணங்கள் என்ன சொல்கின்றன?  

தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், விருதுநகர் மாவட்டம் (இருப்பு) ஸ்ரீவில்லிபுத்தூர் (ஆண்டுப் பட்டிகை வழக்கு எண்கள் 550/2024, 551/2024, 552/2024, 553/2024 & 554/2024) குற்றம் சாட்டப்பட்ட மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்தின் உரிமையாளர் போத்திராஜ் மற்றும் மேலாளர் அருண் தங்கசாமிக்கு எதிராக தீர்ப்புரைகள் வழங்கியிருக்கின்றன. அவற்றில் குறிப்பிட வேண்டியவை -

‘ஆய்வின்போது,  பெண் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாகப் பெறப்படும் புகார்கள் மீதான நடவடிக்கை  எடுப்பதற்கான குழு ஒன்று தொழிற்சாலை வளாகத்திற் குள்ளேயே உரிமையாளரால் அமைக் கப்பட்டிருக்கவில்லை.

வீரபாண்டி என்ற தொழிலாளிக்கு கால் முறிந்து விபத்துக்குள்ளானது குறித்து படிவம் 18 அறிக்கையானது இணை இயக்குநர், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், சிவகாசி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. தொழிலாளர்கள் வாரத்தில் 48 மணி நேரத்திற்கு மேல் தொழிற் சாலையில் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தறி ஓட்டுபவர்களும், பிட்டரும் 72 மணி நேரம் வேலை பார்த்துள்ளனர். மிகைநேர பணிக் காலத்திற்கு இரட்டிப்பு கூலி வழங்கப்பட்டி ருக்கவில்லை.  ஆய்வின்போது அக்டோபர் 2023ம் மாதத்திற்கான சம்பளப் பதிவேடு பராமரிக்கப் படவில்லை. கேட்டும் காண்பிக்கப்படவில்லை. 

தொழிற்சாலையில் கடந்த 4 வருடங்களாக தேசியப் பண்டிகை விடுமுறை தினங்களில் தொழிலாளர்களால் உற்பத்திப் பணிகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. 2020 முதல் 2023 வரையிலான காலத்தில் தேசிய விடுமுறை தினங்களில் (ஜனவரி 26 குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி) பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இருமடங்கு சம்பளம் தரப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. 

mrwhite2

எதிரிகளின் (போத்திராஜ் மற்றும் அருண் தங்கசாமி) குற்ற ஒப்புதலைக் கருத்தில்கொண்டு தொழிற்சாலை சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றவாளி என்று தீர்மானித்து அபராதம் விதித்தும், கட்டத் தவறினால் மெய்க்காவல் சிறைத் தண்டனை விதித்தும் உத்தரவிடப் படுகிறது.’மேற்கண்ட தீர்ப்புரைகளை ஏற்று மொத்த அபராதத் தொகை ரூ.57,000ஐ போத்திராஜும் அருண் தங்கசாமியும் கட்டியுள்ளனர். 

அன்னராஜ் உள்ளிட்ட தொழிலாளர்களின் பணிநீக்க நஷ்ட ஈடு கோரிக்கை என்னவானது? 

மதுரை, கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி, சென்னை, தொழிலாளர் ஆணையருக்கு அனுப்பியுள்ள நடவடிக்கை விவர அறிக்கையில்  ‘மிகை நேரம், தேசிய விடுமுறை நாட்களுக்கான சம்பளம், பணி இழப்பு போன்றவற்றுக்கான நஷ்டஈடாக ரூ.40 கோடியினை நிர்வாகத்திடமிருந்து பெற்றுத்தர வேண்டும் என்பது அன்னராஜ் தரப்பின் கோரிக்கையாக உள்ளது. தொழிற்தகராறு சட்டம் 1947ன் கீழ் தொழிற்தகராறு ஏதும் எழுப்பப்படாத நிலையில், புகாரின் அடிப் படையில் சமரச பேச்சுவார்த்தை மேற்கொள்ள இயலவில்லை. தொழிலாளர்களுக்கான நிலுவைத்தொகை குறித்து தொழிலாளர் நீதிமன்றத்தில் பிரிவு 33(ஈ)(2)ன் கீழ் கேட்பு மனு தாக்கல் செய்து நிவாரணம் காண்பதற்கு தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். 

அன்னராஜோ "அரசுத்துறை அதிகாரிகள் போத்தீஸ் நிர்வாக இயக்குநர் ரமேஷுக்கு முன்னால் வளைந்து நிற்பவர்கள். அதனால்தான், கிடைத்த ஆதாயத்துக்கு ஏற்றவாறு நிர்வாகத் துக்கு சாதகமாக நடந்துகொள்கிறார்கள். தொழிலாளர் நீதிமன்றத்தில் பரிகாரம் தேடிக்கொள்ளவேண்டும் என்பது காலாகாலத்துக்கும் வழக்கை  இழுத்தடித்து தொழிலாளர்களை ஒரேயடியாகச் சோர்ந்துபோகச் செய்வதற்கான உத்திதான். இந்த மில்லில் இரவு நேரத்தில் பெண் தொழிலாளர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். அங்கு  கொலைகூட நடந் திருக்கிறது. எது நடந்தாலும் பணபலத்துடன் நிர்வாகிகள்  சுலபமாகத் தப்பித்துவிடுகிறார்கள்'' என்றார் சீற்றத்துடன். 

நாம் போத்தீஸ் நிர்வாக இயக்குநர் ரமேஷை தொடர்பு கொண்டோம். "எனக்கு ஜவுளிக்கடை பார்க்கிறதுக்கே நேரம் கிடையாது.  ஸ்ரீவில்லி புத்தூர்ல என்ன நடக்குன்னு எனக்கு கரெக்டா தெரியல. என் தம்பிதான் மினிஸ்டர் ஒயிட்டை டீல் பண்ணிட்டிருக்காரு. அவருக்கு போன் பண்ணி கேட்டுக்கங்க'' என்று தன் மீதான குற்றச்சாட்டினை மறுத்தார். மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்தின் உரிமையாளர் போத்திராஜ் லைனில் வராத நிலையில், மேலாளர் அருண் தங்கசாமியிடம் பேசினோம். 

"இங்க வயசான ஒருத்தர் வேலை பார்க்கிறாரு. அவரு மேலதான் பாலியல் கம்ப்ளைன்ட். கொலை நடந்ததை மறைக்க முடியுமா? ஃபேக்டரி ஆக்ட்காரங்களுக்கு பயந்து அவசரத்துல ஃபைன் கட்டினோம்.  அன்னராஜ் பொழப்பே பணம் பறிக்கிறதுதான். ஐத மூலம் கோடிகளில் பேரம் நடத்திப் பார்த்தாரு. நாங்க சம்மதிக்கல. அதான்..  நிர்வாகத்தை எதிர்த்து நின்னா தலைக்கு நாலஞ்சு லட்சம் கிடைக்கும்னு சொல்லி ஏமாத்தி, தொழிலாளர்கள்கிட்ட வழக்கு செலவுக்கு வசூல் பண்ணி, இத எல்லாம் பண்ணிட்டிருக்காரு. அவரு பின்னால போன ரொம்பப் பேரு மில்லுக்குத் திரும்ப வந்துட்டாங்க. அன்னராஜ் என்கிட்ட பேசின ரெகார்டிங்கை அனுப்புறேன். கேளுங்க..’என்றார்.  அதில், "இந்தமாதிரி விவகாரம்னா ஆளும்கட்சிக்காரங்க கோடிக்கணக்குல கேட்பாங்க. நான் விஷயத்தை கட்சி மேலிடத்துல சொல்லிருக்கேன். அவங்க கட்சி நிதியாத்தான் கேட்பாங்க. எவ்வளவுன்னு சொல்லுவாங்க, நீங்க கொடுத்திருங்க''’என்கிறார் அன்னராஜ்.  

எரிகிற வீட்டில் பிடுங்கிய மட்டும் லாபம் என்பதுபோல் தொழிலாளர் பிரச்சனையில் பண அரசியல் பண்ணலாமா?

-அதிதேஜா